மதுரை அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேற்படி நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
பக்தர்களுக்கு அன்னதான உணவு பரிமாறி உணவு அருந்தினார். உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் திருக்கோயில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி மற்றும் உள்ளூர் கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர், அவர்களுடன் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
2024 டிசம்பர் 26 ந்தேதி முதல் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை மதியம் 12:00 மணிக்கு, ஒரு வேளை மட்டும் தினம் 100 பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்குவது குறித்த தகவல்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் நாள் முழுவதும் 11 கோயில்களிலும், ஒருவேளை 760 கோயில்களிலும் அன்னதானம் வழங்கி வருவதால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்களின் பயன் அடைகிறார்கள்.இதனைதொடர்ந்து நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கள்ளழகர் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் என 6 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதியம் உணவு வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 5,775 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.