பரமக்குடி,அக்.15: பரமக்குடி வட்டார வேளாண்மைத்துறை மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில், பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு சாகுபடி சம்பா நெல் பருவத்திற்கு முன்னதாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தக்கைப்பூண்டு விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் ரூபாய் ஆயிரம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உரப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தெளிச்சாத்தநல்லூர் ஆறுமுகம் என்ற விவசாயி பயிரிடப்பட்டுள்ள உரப்பயிர் சாகுபடியினை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறையின் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் நீர்வளம் மற்றும் நில வளத்திட்டத்தின் கூடுதல் இயக்குநர் கண்ணையா ஆய்வு செய்தார். அவர் பேசுகையில் , “பசுந்தாள் உரப்பயிரை நெற் பயிர் சாகுபடிக்கு முன்னதாக சாகுபடி செய்து 45 நாட்கள் கழித்து அந்த வயலில் சுழற்கலப்பை கொண்டு மடக்கி உழ வேண்டும். இதனால்,மண்ணில் உயிர்ம கரிமச்சத்து அதிகரித்து மண்வளம் பெருகும் .மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் அடுத்த பயிருக்கு இட வேண்டிய ரசாயன உரத்தின் அளவை குறைத்து சாகுபடி செலவு குறைக்கலாம்.மண்ணுயிர்கள் பெருகி மகசூல் பெருகும் . தக்கைப்பூண்டு மூடுபயிராக அடர்த்தியாக வளர்வதால் களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. மண்ணின் களர் தன்மை நீங்கி மண் வளம் பெறுகிறது. இதனால் விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண் வளத்தை காக்க வேண்டும் என கூறினார்.
வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மற்றும் மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக
உதவியாளர் பாஸ்கரமணியன்,
வேளாண்மை துணை இயக்குநர் (மாநில
திட்டம்) அமர்லால், வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் மற்றும் தரக்கட்டுபாடு
நாகராஜன் .பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்
பரமக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உர பயிர்களை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கன்னையா ஆய்வு மேற்கொண்டார்.