தென்காசி மாவட்டம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி விசு திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஐப்பசி விசு திருவிழாவானது கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் குற்றாலநாதர் சுவாமியும் குழல்வாய்மொழியம்மையும் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விநாயகர், முருகர், குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை ஆகிய நான்கு தேர்கள் ஒரு சேர இழுக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து நடராஜப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதணை நிகழ்வு வருகின்ற திங்கட்கிழமையும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபையில் வைத்து செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளது.