கிருஷ்ணகிரி, டிச. 24– கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்டத் தலைவர்கள் சிவராஜ், முருகேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ராஜி, தென்னை விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் கண்ணு, ராமூர்த்தி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை வகித்து பேசுகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான தேசியக் கொள்கை வரைவுக் கட்டமைப்பை, நீடித்த மற்றும் முழுமையான வேளாண்மைக்கான கூட்டணி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த சட்டத்தால், ரத்து செய்யப்பட்ட பண்ணை சட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும், விவசாயச் சந்தைகளை முறைப்படுத்துவதற்கும் ஒரு மறைக்கப்பட்ட முயற்சி என்று கூறுகிறது. இதனால் விவசாயிகள் சந்தை சுரண்டலுக்கு ஆளாக நேரிடும். இது குறித்து மத்திய அரசு, மாநில அரசிடம் எந்த கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி, அதன் நகலை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர்.