கோவை ஜூலை:02
கோவை சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் உலக களரி கூட்டமைப்பு மற்றும் இந்திய களரி கூட்டமைப்பு சார்பில் ஆய்தம் -2024 என்ற பெயரில் களரி அடிமுறை சிலம்பம் குத்து வரிசை உள்ளிட்ட பாரம்பரிய போர்க்கலைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவியரின் களரி சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை பார்வையிட்டார்.
பின்னர் பாரம்பரிய கலைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பரிசு கோப்பைகளையும் வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் போர் கலையான களரிபயற்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. சங்க காலம் தொட்டே களரி என்ற போர்க் கலை இருந்து வருகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய போர்க் கலைகளை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
களரி கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் களரி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை துவக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
களரி கலையை மீட்டெடுத்து உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படும் தன்னார்வ அமைப்புகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்கும். களரி கலையை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்பது குறித்து களரி பயிற்சியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.