நாகர்கோவில் ஜன 31
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் டெண்டரை கேரளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆனால் அந்த ஒப்பந்ததாரர் குப்பைகளை அகற்றுவதில் சரியான முறைகளை பின்பற்றாததால் நாகர்கோவில் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளின் சுகாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுவாகவே குப்பைகளை அகற்றும்போது மட்கும் குப்பைகளை தனியாகவும், மட்காத குப்பைகளை தனியாகவும் அகற்ற வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்ததாரர் அப்படி விதிகளை பின்பற்றாமல் அனைத்து குப்பைகளையும் இரவோடு, இரவாக டாரஸ் லாரிகளில் ஏற்றிக்கொண்டு போய், நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனையின் பின்பகுதியில் கொட்டியுள்ளார். இது நகரின் மையப்பகுதி என்பதைப்பற்றியும் ஒப்பந்ததாரர் கவலைப்படவில்லை. மருத்துவமனைக்கு அருகிலேயே குப்பையை கொட்டி இருப்பதால் அந்த பகுதியே சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது. குப்பைகளை ஏராளமான தெருநாய்களும் சுற்றிவருவதால், அந்த வழியே செல்லும் மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் இதை புகைப்படம் எடுத்ததும், அதன் மேலே மண்ணை போட்டு ஒப்பந்ததாரர் தரப்பினர் மூடி உள்ளனர். இதேபோல் நாகர்கோவிலில் ஒப்பந்ததாரர் எங்கெல்லாம் கழிவுகளை கொட்டி மண் போட்டு மூடி உள்ளார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, மட்காத பல ஆண்டுகளான மக்காத குப்பைகளையும் அப்படியே மண்ணிலேயே வீசி, அதன் மேல் மண் போட்டு சென்றிருப்பதால் மழை பெய்தால், நிலத்தடி நீராகவும் தண்ணீர் மண்ணிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் சுகாதாரச் சீர்கேடு என்றால், இன்னொரு புறத்தில் சுற்றுச்சூழலுக்கும் இதனால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்றாமல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலேயே வீசி சென்றிருக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து, நாகர்கோவில் மாநகர மக்களின் சுகாதார நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.