நீலகிரி. ஏப்ரல்.01.
நீலகிரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நீலகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்துக்கு கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் குப்பு ரணி தலைமை தாங்கினார்
அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க துணை தலைவர் சுப்பிரமணி,
கோத்தகிரி
ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான் உள்ளிட்டோர் பங்கேற்று நுகர்வோர் சார்ந்த துறைகளை சுட்டிக்காட்டினர்
கோரிக்கைகள்.
மின் நுகர்வோர் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு பெயர்மாற்ற முகாம் நடத்த வேண்டும்.
மழை காலத்துக்கு முன்னதாக மின்தடை ஏற்படாமல் இருக்க மின் வழித்தடங்களில் உள்ள மர கிளைகள் உள்ளிட்டவை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் உள்ள ஆபத்தான மின் கம்பங்களை மாற்றி அமைக்க அதிகபட்ச கட்டணம் கோரப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டங்களை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் நடத்த வேண்டும்.மேலும் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோத்தகிரி மாதா கோவில்ரோடு சமுதாய கூடம் அருகே சிமெண்ட் மின் கம்பம், வெஸ்ட் புருக் பெத்தளா செல்லும் வழியில் உள்ள மின்கம்பம், குஞ்சப்பனை – மாமரம் இடையில் உள்ள இரண்டு மின்கம்பம் என பல மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இவற்றை சரிசெய்ய வேண்டும். கோத்தகிரி அரவேனு ஆடுபெட்டு பகுதியில் வீடுகளுக்கு அடிக்கடி குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும்.
மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். மின் இணைப்பு மற்றும் உள்ள மின் கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மின்வாரிய பணியாளர்கள் புகார் தெரிவிக்கும் மக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மின் வாடிக்கையாளர்கள் குறைகளை விரைவில் களைய ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பதில் அளித்த கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் குப்புராணி பேசும்போது மின்சார வாரியம் மின் நுகர்வோருக்கு சிறந்த சேவை வழங்கும் துறையாக உள்ளது. எனவே நுகர்வோர் குறைகளை களைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு இணைய மூலம் விண்ணப்பிப்பதால் சிறப்பு முகாம்கள் அவசியமில்லை அரசு அறிவித்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மழைக்காலங்கள் முன்னதாக அனைத்து பிரிவுகளிலும் மரக்கிளைகள் வெட்டி அகற்றுவதற்கு அனைத்து பொறியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய்ந்துள்ள மின்கம்பங்கள விரைவில் சீரமைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் மாற்றி அமைக்க ஏற்கனவே உள்ள விதிமுறைகள்படியே மேற்கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் பணம் கட்டி சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கலாம். அதுபோல தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் விரைவில் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். அனைத்து கட்டண விவரங்களும் அனைத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய அனைத்து மின் பொறியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்பார்வை பொறியாளர் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போது உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சுழற்சி முறையில் குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். மரியாதை குறைவாக நடக்கும் ஊழியர்கள் மீது மின் பொறியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் சேகர் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட மின்சார வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.