அரியலூர், டிச;12
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் “நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களின் உரிமைகளையும், கடமைகளையும் அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட உணவுப்பொருள் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
அந்தவகையில் நுகர்வோர் பயன்பாடு குறித்தும், பொருட்களின் தரம், பொருட்களின் சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உணவே மருந்து உடலே பிரதானம், விளம்பரத்திற்கு மயங்காதே விழிப்புணர்வை இழக்காதே, வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான நுகர்வு, தரம் என்ற மந்திரம் வெற்றியின் தந்திரம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) கீதா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்