ஈரோடு, ஜூலை . 29
துணி நூல் துறை சார்பில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது
இதில்
ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்கள், ஈரோடு சாயச்சாலை தொழிற் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஈரோடு ஏற்றுமதி கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் ஜவுளித் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பற்றிய விவரங்கள், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறுகிய காலப் பயிற்சி திட்டம் தொடர்பாக விளக்கி கூறப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் கூறியதாவது
தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை தமிழ்நாடு அரசால் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் சாலை வசதி சுற்றுசுவர் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் நீர் விநியோகம் தெரு விளக்கு அமைத்தல் மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் தொலை தொடர்பு வசதி போன்றவைகள் ஆய்வுக்கூடம் வடிவமைப்பு மையம் பயிற்சி மையம் வியாபார மையம் கிடங்கு வசதி மூலப்பொருட்கள் மையம் குழந்தைகள் காப்பகம் உணவகம் பணியாளர்கள் விடுதி அலுவலகம் மற்றும் இதர இனங்கள் உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் போன்ற உட்பிரிவுகளுக்கு ரூ.2.50 கோடி வரை
தமிழ்நாடு அரசால் மானியம் வழங்கப்படுகிறது.
சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் சிறு, குறு தொழிற் நிறுவனங்கள் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பன்மடங்கு பெருக வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்
கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்
ஜவுளி தொழில்முனைவோர்கள் இத்திட்டம் தொடர்பாக மேலும்
விபரங்களுக்கு சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சங்ககிரி
மெயின்ரோடு, குகை, சேலம்- 636 006. என்ற முகவரியிலும் 0427-2913006 தொலைபேசி எண்ணிலும்
மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
கூட்டத்தில், சேலம் மண்டல துணி நூல் துணை இயக்குனர் அம்சவேணி தொழில் முனைவோர்கள் ஈரோடு ஜவுளி தொழில் சார்ந்த கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.