தென் தாமரைக் குளம் மார்ச் 22
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இடம் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் உள்ள இந்த விடுதிகளால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் விவேகானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டிட கழிவுகளை அதன் உரிமையாளர் சாலையில் கொட்டியுள்ளார்.மேலும் அருகில் உள்ள குடியிருப்பவனுக்கு செல்லும் சாலையிலும் இந்த கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமம் அடைந்துள்ளனர் எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கட்டிட கழிவுகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.