காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நா ட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், 3-4 தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல் 5 கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. முதல்கட்டத்தில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்த கட்டங்களில் இண்டியா கூட்டணி சரிந்தது. நேற்று நடந்த ஐந்தாம் கட்டத்தில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்தது. ஆறாவது மற்றும் ஏழாவது கட்டத்தில் நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை உங்கள் உற்சாகம் வெளிப்படுத்துகிறது.
ஜூன் 4 ஆம் தேதி, இண்டியா கூட்டணி மிகப் பெரிய தாக்குதலை சந்திக்கும். நாட்டில் நடக்கும் ஊழல்கள், திருப்திப்ப டுத்தும் அரசியல், சனாதன தர்மத்தை எதிர்க்கும் சிதைந்த மனநிலை, குற்றவாளிகள், மாஃபியாக்கள் ஆகியவற்றுக்கு எதிரான தாக்குதலாக அது இருக்கும்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே காங்கிரஸ், மகாத்மா காந்தியை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. காந்தியின் நெறிமுறைகள் மற்றும் கொள்கை களை அது கைவிட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நாட்டை நாசப்படுத்தி விட்டன. 3-4 தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டன. 60 வருடங்களில் பெரிய பெரிய அரண்மனைகளை கட்டிக்கொண்டும், சுவிஸ் வங்கியில் கணக்கு ஏற்படுத்திக்கொண்டும் இவர்கள் வாழத் தொடங்கினர். மக்களிடம் உண்ண உணவு இல்லாத நிலையில், இவர்களின் அலமாரிகளில் கரன்சி நோட்டுகள் நிறைந்துள்ளன.
மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்க பள்ளிகள் இல்லை. இவர்களின் குழந்தைகளோ தொடர்ந்து வெளிநாட்டில் படிக்கிறார்கள். ஏழைகள் கஷ்டத்திலும் சிரமத்திலும் இருந்ததை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
மோடி வந்த பிறகுதான், ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், மின்சாரமும் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் எரிவாயு வழங்க முன்வந்தவர் மோடி. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் தண்ணீர் வழங்க இரவு பகலாக உழைத்து வருபவர் மோடி. இந்த ஏழையின் மகன், ஒரு தலைமை ஊழியனாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கியபோதுதான், நாட்டில் ஏழைகள்
மீதான அக்கறை தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகளின் ஓட்டைகளை நிரப்பவே நான் அதிக நேரம் செலவிட வேண்டியதாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிகள் மேற்கொள்ளப்படும். இது மோடியின் உத்தரவாதம்” என தெரிவித்துள்ளார்.