நாகர்கோவில் மே 27
குமரி மாவட்டத்தில் தோவாளை ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு தோவாளையில் வைத்து நடைபெற்றது. இம்மாநாட்டினை தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்ட தோவாளை ஒன்றிய மாற்று திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் ஒன்றிய மாநாடு தோவாளையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தோவாளை ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். தோவாளை ஒன்றிய ஆலோசகர் ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய இணைச் செயலாளர் மாரியப்பன் முன்னிலை வைகித்தார். ஒன்றிய செயலர் ஆண்டறிக்கை வாசித்தார். இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார். அவர் பேசும் போது,
இறைவன் மனிதனைப் படைக்கின்ற பொழுது ஏதோ ஒரு வகையில் குறையுடன் தான் படைக்கிறான். இறைவன் படைக்கின்ற இந்த படைப்பில் அனைவரும் ஈகை குணத்துடன் இருக்க வேண்டும். இறைவன் படைத்த இந்த படைப்பில் குறைபாடுகள் இருந்தாலும் யாரும் மனம் தளராமல் தன்னம்பிக்கையை விடாமல் இருக்க வேண்டும். இந்த குறைகளை நீங்கள் யாரும் குறையாக நினைக்காமல், கவலைப்படாமல் ஒவ்வொரு வரும் தங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக பாடுபட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து உங்களின் கோரிக்கையை ஏற்று மூன்று சக்கர மோட்டார் பைக் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட பல மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களையும் நலதிட்டங்களையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு மாதம் ரூ.5000 வழங்க வேண்டும் எனவும், மாற்று திறனாளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வதற்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் எனவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர மோட்டார் பைக் வழங்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் வண்டியில் இலவசமாக பயணம் செய்ய வேண்டியும், மாற்று திறனாளிகளின் குழந்தைகளுக்கு படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் மகளிர் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு அனைத்து பேருந்துகளிலும் அடையாள அட்டை காண்பித்து இலவசமாக பயணம் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டியும், அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிக்கான இருக்கையில் பெயர் எழுதி மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்பெறும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் இலவச காப்பீடு திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக விரைவு படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்காக வட்டியில்லா கடன் திட்டத்தை விரைவில் செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியம்மன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாகி அருணாசலம், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் விரும்பும் தோவாளை ஒன்றிய தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர்கள் பிச்சை, மாடசாமி, செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் விஜயா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.