புதுக்கடை, டிச- 20
புதுக்கடை அருகே இனயத்தை சேர்ந்தவர் வின்சென்ட் (55). இவர் சொந்தமாக வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். சில நேரங்களில் சங்கு எடுக்கும் தொழிலுக்கும் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் இவர் தேங்காபட்டணம் துறைமுகத்திலிருந்து சங்கு எடுக்க சென்றார். உடன் உறவினர்கள் உட்பட 7 மீனவர்கள் சென்றனர்.
துறைமுகத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வின்சென்ட் சங்கு எடுக்கும் வேலையில் ஈடுபட்டார். கடலுக்குள் இருந்து சங்கை எடுத்துக் கொண்டு மேலே வரும்போது வின்சென்ட் திடீரென மயங்கி சரிந்தார். உடன் சென்ற மீனவர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட வின்சென்ட் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கிரேவின் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.