ராமநாதபுரம், டிச.19-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டத்தில் அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுக் குறித்து கேட்டறிந்தார். பின் பொது மக்களை சந்தித்து மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து கேட்டு அறிந்தவுடன் ஒவ்வொரு துறை அலுவலர்களும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தை ஆய்வு செய்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்டறிந்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதுடன் இத்திட்டத்தின் நோக்கம் அரசு வழங்கும் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு துறை அலுவலரும் தங்கள் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ராமநாதபுரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் உரம் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான அளவிற்கு உயிர் உரங்கள் உற்பத்தி செய்து வழங்கிட வேண்டுமென வேளாண்மை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்திரா நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மாணவர்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டு அறிந்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) முகம்மது இர்ஃபான், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மோகன்ராஜ், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.