பூதப்பாண்டி மார்ச் 24
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளை சந்தித்து, அவர்களின் உடல்நலம் மற்றும் சிகிட்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. உள்நேயாளிகளின் பரிசோதனை விவரங்கள், உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், 24 மணிநேர வெந்நீர் வசதி குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகளை தினமும் மாற்றும் வேண்டும் எனவும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.