மயிலாடுதுறை
கிராமப்புற மாணவர்கள் 200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே கலைகளை அழியாமல் காக்கும் வகையில் இலவச பயிற்சி அளித்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தமிழக ஆளுநர் விருது:- தற்காப்புக் கலை ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கக் கோரிக்கை:-
சென்னை கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற ‘எண்ணித் துணிக’ என்ற பாரம்பரிய தற்காப்பு கலை ஆசான்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று கலந்துரையாடினார். சர்வதேச அளவில் தற்காப்புக் கலை பயிற்றுநர்கள் 250 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறந்த ஆசான்களுக்கான விருதினை ஆளுநர் ஆ.என்.ரவி வழங்கி கௌரவித்தார். இதில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் தற்காப்பு கலை ஆசான் விநாயகம்(41) என்பவர் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார். விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய விநாயகத்துக்கு, அவரிடம் தற்காப்புக் கலை பயின்ற மாணவர்கள், அவரது வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து, தற்காப்புக்கலை பயிற்றுநர் விநாயகம் கூறுகையில், போதைப்பொருள் பயன்பாட்டில் நாட்டம், செல்போன் மோகத்தில் மூழ்கி எதிர்காலத்தை பாழடித்துவரும் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையில் எங்கள் பகுதியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே ஆகிய கலைகளை கற்றுத்தந்து வருகிறேன். தற்காப்புக் கலைகளை அழியாமல் காக்கும் முயற்சியில் ஈடுபடும் தற்காப்புக்கலை ஆசிரியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.