மதுரை ஆகஸ்ட் 20,
மதுரை மாவட்டம் முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் அவசரகால உயிர்காக்கும் சிகிச்சையால் நலம் பெற்ற பயனாளி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறைக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8.713 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10,999 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்பாராத வகையில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் இன்னுயிரை பாதுகாத்திடும் விதமாக “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தை முதலமைச்சர் 18.12.2021 அன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.
இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம் தம்மைக் காக்கும் 48” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள். இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு எதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.
1. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால். நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.
3. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையை பெறவிரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர்
தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் (https://cmchistn.com
வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104.ஐ தொடர்பு கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 5 அரசு மருத்துவமனைகள், 15 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 20 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 12322 பயனாளிகள் ரூபாய் 15,35,54,150 மதிப்பீட்டில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம், கே.கே.நகரில் வசித்து வரும் கல்லூரி மாணவர் செல்வன் குணசேகரன் (வயது 18) தெரிவித்ததாவது:- எனது பெயர் குணசேகரன் (வயது 18). நான் மதுரை மாவட்டம் கே.கே.நகரில் வசித்து வருகிறேன். நான் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வரும்போது எதிர்பாராத விதமாக விபத்திற்கு உள்ளானேன். இந்த விபத்தினால் எனக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 சேவை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் / நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் உடனடியாக சிகிச்சை பெற்றேன். மருத்துவமனையில் எனக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கான செலவினமும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டபோது உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உடல்நிலை எப்போது சரியாகப் போகிறது என்ற பயத்துடன் இருந்தேன். ஆனால், தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். எனக்கு சிகிச்சை அளித்து என்னை நலம்பெற செய்த மருத்துவர்களுக்கும், இத்திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
இசாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை.
ம.கயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மதுரை.