மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
395 கிராம ஊராட்சிகளில் 73 முகாம்கள் நடைபெற உள்ளன. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்ககுட்பட்ட கள்ளந்திரி, குறிஞ்சி நகரில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அளவில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சி கள்ளந்திரியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முகாமில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பிமூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா உட்பட பொதுமக்கள் பார்வையிட்டனர். அதன்பின்பு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்ட அளவில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது- தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களால் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 18.12.2023 முதல் 06.01.2024 வரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள். 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதியையொட்டியுள்ள 24 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட 38.441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்போது 395 கிராம ஊராட்சிகளில் 73 முகாம்கள் 11-07-2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற தமிழ்நாடு மின்சார வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. வருவாய்த்துறை உள்ளிட்ட 15 அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படுகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இம்முகாமில், தமிழ்நாடு மின்சார வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. வருவாய்த்துறை. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், மீனவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்று இணைய தளத்தில் பதிவு செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. மேலும், இம்முகாம் காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 3.00 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கீதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அரவிந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுனர்.