கரூர், செப்.7-
2024- 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5
பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட,மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் (செப்டம்பர்) மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி, மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும் 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போ போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். அப்போது அடுத்த வாரம் தொடங்க உள்ள விளையாட்டு போட்டிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.