திருவாரூர் ஜனவரி 24
திருவாரூர் மாவட்டத்தில், நெல் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர் நவீன் , தொழில்நுட்ப அலுவலர் ராகுல் ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு, காலதாமதமாகத் துவங்கியதால், பருவமழை தற்போதும் பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக, கனமழை பெய்துள்ளது. மேலும், பனிப்பொழிவு நிலவி வருவதால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவும் உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர வைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, மத்திய அரசின் நிபுணர்கள் குழு நெற்பயிர்களை ஆய்வு செய்ய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பூவார்நத்தம், சோனாப்பேட்டை, எடமேலையூர், செருமங்கலம், பைங்காநாடு, திருவாரூர் வட்டத்தினைச்சேர்ந்த தப்பளாம்புலியூர் ஆகிய பல்வேறு கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
சீதோசன நிலை 17 சதவீதத்திற்கு குறைவாகவும் நெல்லை வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால் ஜனவரியில், மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற சீதோசன நிலையால் 22 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்ய நிபுணர் குழுவிடம் விவசாயிகள் கேட்டுள்ளனர். அரசு சார்பிலும் மழையால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளோம். இதுவரை தமிழ்நாட்டில் 5 இலட்சத்து 76 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, மத்திய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.