குளச்சல், மார்- 8
குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி (44). கொத்தனார். இவரது தம்பி ரீகன் ஜோய் (42)டிரைவராக வேலை பார்க்கிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வீட்டின் எதிரே மழை நீர் செல்வது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ரீகன் ஜோய் நேற்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அண்ணன் கென்னடியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றவே தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தி எடுத்து அண்ணன் என்று பாராமல் கென்னடியை வெட்ட முயன்றார். அப்போது கென்னடிக்கு கையில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுக்க வந்த கென்னடியின் மனைவி ஜெயா (35) என்பவரையும் வெட்டினார். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கென்னடி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரீகன் ஜோய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.