மார்த்தாண்டம், அக் – 16
குமரி மாவட்டம் குழித்துறை அருகே பழவாறு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் குழித்துறை நகர தேமுதிக பொருளாளராக உள்ளார். இவருக்கு மனைவி ரெண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பழவாறு பகுதியில் நேற்று முன்தினம் குழித்துறை நகராட்சி சார்பில் சாலை போடப்பட்டது. அதை செல்வன் முன் நின்று நடத்தியுள்ளார். சாலை போடும்போது அதே பகுதியை சேர்ந்த ரெண்டு பேர் சாலை போடுவது சம்பந்தமாக செல்வனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கொலைமிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு செல்வன் குழித்துறை பகுதிக்கு சென்ற பொருட்கள் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். வழியில் செல்வனிடம் முன் விரோதத்தில் இருந்த 2 பேர் மது போதையில் செல்வனை வழிமறித்து கையில் வைத்திருந்த அறிவாளால் செல்வன் கை உட்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர்.
இதில் செல்வனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அவர்கள் ரெண்டு பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். செல்வன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.