ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை
மயிலாடுதுறை மாவட்டத்தில்l பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்து உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்:- இத்திட்டத்தை நகர்ப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 99 ஊராட்சிகளில் உள்ள 115 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இத்திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 6,691 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு காலை உணவு
பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் கூறுகையில் நேற்று ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, நகர் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.