கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த அத்திப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இக்கோவிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆடி மாதம் 1-ம் தேதி இக்கோவிலில் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்த நிலையில், உண்டியல் பணம் எடுக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை கெடப்பாறை கொண்டு உடைந்த இரு கொள்ளையர்கள், உள்ளே புகுந்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள்ளாக கோவில் அருகே வாடகைக்கு குடியிருந்து வரும் இளைஞர்களில் ஒருவரான அஜித், கோவிலில் சப்தம் கேட்டு, வந்து பார்த்தபோது இரு கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஓடி சென்று கொள்ளையனை பிடிக்க முயற்சித்தபோது, ஒரு கொள்ளையன் அருகே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய நிலையில், ஒருவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அஜித் சப்தம் போடவே தூங்கிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் எழுந்து வந்து பிடிப்பட்ட கொள்ளையனை மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரனை செய்ததில் பிடிபட்ட கொள்ளையன் சிங்காரப்பேட்டை அடுத்துள்ள மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூவரசன் (23) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த மற்றொரு கொள்ளையன் விஜயகுமார் (16) தேடி வந்த நிலையில், செல்போன் உதவியுடன் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, பூவரசனை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், விஜயகுமாரை கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர். மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலாக தனியாக உள்ள கோவில்களில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வந்த நிலையில், கோவில் கொள்ளையர்கள் பிடிபட்டது பொது மக்களிடையே நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.