நித்திரவிளை , மார்ச் – 7
நித்திரவிளை அருகே நடைக்காவு ஊராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சாத்தன்கோடு தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தபால் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றினர். மேலும் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் பதில் அளித்தது.
இதற்கிடையில் சிலர் தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி ஊர் பொதுமக்கள் தங்களாகவே பணம் வசூல் செய்து அதே பகுதியில் தனியார் நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து தபால் நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தபால் நிலையம் இருந்த இடத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டாமல் அதே இடத்தில் கழிவறை கட்டுமான பணிகள் நடப்பதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி ஊராட்சி வளாகத்தில் புதிய தபால் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்தப் பகுதியில் மிகப்பெரிய பிளக்ஸ் போர்டு அமைத்து கோரிக்கை வைத்துள்ளனர்.