சென்னை, செப்டம்பர் -30,
மனிதாபிமானத்தின் நற்பண்பை எடுத்துரைக்கும் இந்த மனதைத் தொடும் நிகழ்வில், ஃபான்கோனி அனீமியா நோயிலிருந்து காப்பாற்றப்பட்ட திருச்சியை சேர்ந்த 11 வயது சிறுவன் செல்வாவும் அவரது உயிரைக் காப்பாற்ற இரத்த ஸ்டெம் செல் தானமளித்த பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் பார்மசிஸ்ட் ஆன 26 வயது டாக்டர்.ஸ்மிதா ஜோஷியும் முதன்முறையாக சந்தித்தனர்.
டாக்டர் அருணா ராஜேந்திரனின் கீழ் சிகிச்சை பெற்ற செல்வா, அவர் பெற்ற இரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையால் புது வாழ்வு பெற்று, தற்போது 7 ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
தன் பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதாரத் துறை நிபுணரான டாக்டர். ஸ்மிதா ஜோஷி, மற்றவர்களுக்கு உதவுவதில் கொண்டுள்ள தனது ஆர்வத்தால் உந்தப்பட்டு டி.கே.எம் எஸ் – பி.எம் எஸ்.டி அறக்கட்டளைக்கு ஸ்டெம் செல்லை தானமாக அளித்தார். அவரது குடும்பத்தினர் இதற்கு ஆதரவு தராத போதிலும், அவர் தனது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தானமளிக்க முன்வந்தார். “இது நான் செய்ய வேண்டிய கடமை என்று நான் உணர்ந்தேன். என்னால் வாழ்க்கையில் இன்னொருவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க முடியும் என்பதே இதற்குப் போதுமான உந்துதலை வழங்கியது” என்று ஸ்மிதா கூறினார்.