நாகர்கோவில் பிப் 24
ஏழை மாணவர்களின் கல்வி,வேலை வாய்ப்பு உரிமைகளை பறிப்பது தான் திராவிட மாடலா? மும்மொழிக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடும் திமுக அரசுக்கு
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
” இந்தியாவின் அநேக மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் திராவிட கட்சிகள் மும்மொழிக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் உள்ளன. அதில் மிகக் குறிப்பாக திமுக அரசு இதில் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்தியை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் தமிழக ஏழை குழந்தைகள், மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் 2000க்கும் அதிகமான சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. இங்கு ஏற்கனவே இந்தி பாடத்திட்டமாக உள்ளது. இதுபோக தனியார் பள்ளிகள் சிலவற்றிலும் விருப்பத்தின் பேரில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. சம உரிமை, சம வாய்ப்பு, சமூகநீதி என்றெல்லாம் பேசும் திமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் ஹிந்தி பயில்வதற்கு தடையாக உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி பேசப்படுகிறது. மிக குறிப்பாக வட இந்தியாவில் இந்தியே பிரதானம். அதனால் நம் தமிழகத்தில் உள்ள குழந்தைகளும் இந்தி பயில்கிற பொழுது இந்தியா முழுவதுமான வேலை வாய்ப்புகளை பெற முடியும். இதன் மூலம் கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தினரும் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் அவர்களின் பொருளாதார வளமும் மேம்படும். ஆனால் இதையெல்லாம் விட, தன்னுடைய ஓட்டு அரசியலுக்காக மலிவான அரசியலை செய்து முட்டுக்கட்டை போடுகிறது திமுக அரசு.
அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு பக்கம் இந்தியை படிக்காமல் செய்து விட்டு, மற்றொருபுறத்தில் அவர்களது குடும்ப வாரிசுகளை ஹிந்தி படிக்க வைத்து ஹிந்தி தெரியும் என்கிற காரணத்திற்காக டெல்லியில் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைக்கிறார்கள். தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பலருக்கும் சொந்தமாக சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. அங்கெல்லாம் இந்தி பாடத்திட்டத்தில் உள்ளது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தொல் திருமாவளவன் அவர்களது விசிகவுக்கு சொந்தமான இடத்திலும் ரெட் ஸ்டார் எனும் பெயரில் சிபிஎஸ்சி கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஆகவும் தொல் திருமாவளவன் உள்ளார். இப்போது கேட்டால் இடம்தான் கொடுத்தோம் நாங்கள் துவங்கவே இல்லை என்றெல்லாம் மழுப்பலான பதிலை சொல்கிறார். இது படையப்பா திரைப்படத்தில் மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்று சொல்லும் செந்தில் நகைச்சுவையை முந்துவது போல் உள்ளது.
மொத்தத்தில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு விடக்கூடாது. ஹிந்தி மட்டுமல்லாமல் எந்த மாற்று மொழியையும் பயிலவிடாமல் அவர்களை தமிழகத்தை தாண்டவிடாமல், தங்களின் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளிதான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நோக்கமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி தான் பயில வேண்டும் என்று இல்லை. தங்களுக்கு விருப்பப்பட்ட இன்னொரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது எல்லாம் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன இதையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் புகழை, பெருமையை வீடு தோறும் பரப்புவோம்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.