நாகர்கோவில் – அக்- 03,
பீமநகரி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என பீமநகரி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமநகரி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நியாய விலைக் கடை அருகில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் பீமநகரி ஊராட்சித் தலைவர் சஜிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்:-
பீமநகரி ஊராட்சி 5 ஆண்டு காலமாக மிகுந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஊராட்சித் தலைவியும், அவரது கணவரும் தான் என்பதை வலியுறுத்தி சொல்ல விரும்புகின்றேன். நலத்திட்ட பணிகளை நிறைவேற்றியதுடன் முக்கியமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசிடமிருந்து பெற்று வழங்கிய பெருமைக்குரியவர்களாக தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளார்கள். அவர்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக இப்பகுதியில் நிறைவேற்றப்பட்டன. குடி தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி போன்ற மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை உங்களிடம் கேட்ட போது நல்ல முறையில் இருப்பதாக தெரிவித்தீர்கள்.
பீமநகரி ஊராட்சியினை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி பீமநகரி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது. இணைக்க முற்பட்டால் மக்களின் போராட்டத்தை அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். இதனடிப்படையில் பொதுமக்கள் இத்தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார்கள். மாநகராட்சியோடு இணைக்க முற்படும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பார்வதி என்ற பெண் இங்கு வந்து மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு கொடுத்துள்ளார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பீமநகரி ஊராட்சிக்கு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். இந்த ஊராட்சியின் தலைவர் அவர்களும், அவரது கணவரும் தங்களை இந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீண்டாமை இல்லாத கிராமமாக பீமநகரி ஊராட்சி அரசால் தேர்வு செய்யப்பட்டு இதற்காக அரசு ரூ. 10 இலட்சம் பரிசு தொகையை வழங்கி ஊராட்சித் தலைவரையும், இக்கிராமத்தையும் பாராட்டியது பெருமைக்குரியதாகும். இதைப்போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் தூய்மை பணிகளில் முதல் இடத்தை பெற்ற ஊராட்சியாக பீமநகரி ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் அவர்களின் சேவையை மனதாரப் பாராட்டுகிறேன். இறைவன் திருவருளால் அவர்களுக்கு ஆசியும், அருளும் என்றும் துணையாக இருக்கும். அவர்களை போன்றே அவர்களது குழந்தைகளும் இக்கிராம மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் குழந்தைகளின் சேவை மேலும் இக்கிராமத்திற்கு வலு சேர்க்கும். மேலும் வீட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், நாட்டுக்கும் சேவை செய்கின்ற நல்வாய்ப்பினை இறைவன் அவர்களுக்கு வழங்க துணை இருப்பார் என அவர் பேசினார்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் பீமநகரி ஊராட்சித் தலைவர் சஜிதா மற்றும் அவரது கணவர் சுப்பிரமணியன் ஆகியோரின் சேவையை பாராட்டி கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மலர் கீரிடம் சூட்டி நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் ஆறுமுகநாதன், வார்டு உறுப்பினர்கள் சுபா, நாகமணி, சிவா, சத்தியபாலா ஆகியோருக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெள்ளமடம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் தூய்மை சேவையை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் பரிசுகளை வழங்கினார். பீமநகரி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை கௌரவித்து நினைவு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் பீமநகரி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகநாதன் வரவேற்று பேசினார். வி.எம்.சி. குடியிருப்போர் சங்கத் தலைவர் தாயப்பன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா நகரில் உள்ள பொதுமக்கள் சார்பில் சாலை அமைத்து கொடுத்தமைக்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பீமநகரி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது.
நாக்காமடம் வழியாக பீமநகரி மேலூருக்கு பொதுமக்கள் நலன் கருதி பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக எய்ட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் என்பது தொடர்பான உறுதி மொழியும் இக்கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.