ஈரோடு டிச 14
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 27 ம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.பாரதி ஜோதியை ஏற்றி வைத்து அணிவகுப்பைத் தொடக்கி வைத்த டாக்டர் என்.எஸ். சத்தியசுந்தரி வாழ்த்துரை வழங்கினார்.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டு இந்நிகழ்வில் தவத்திரு அடிகளாரின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர் பொன்னீலன் அடிகளாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி ‘முனைவர் சொ. சேதுபதி தொகுத்த ‘மகாகவி பாரதி வரலாறு ‘பேராசிரியர் மணிகண்டன் தொகுத்தும் பகுத்தும் வெளியிட்ட ‘பாரதியும் ஜப்பானும் ‘ ஆகிய மூன்று நூல்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது ‘பாரதியியல் ஆய்வாளர் முனைவர் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது கேடயம், தகுதிப் பட்டயம், ரூ 50,000 பரிசுத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பேரவையின் பணிக்குழு உறுப்பினர் பொன்னுசாமி விருதாளரின் தகுதிப்பட்டயம் வாசித்தார்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதாளர் முனைவர் சேதுபதிக்கு விருதை வழங்கி சிறப்புரையாற்றினார். விருதாளர் முனைவர் சேதுபதி ஏற்புரை நிகழ்த்தினார். பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம் நன்றி கூறினார்.
முன்னதாக பாரதியார் இறுதி பேருரையாற்றிய ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி ஜோதியை ஏந்திய பேரவையின் மாணவர் படை அணிவகுப்பு தொடங்கியது. அங்கு பாரதி ஜோதியை ஏற்றுவித்து அணிவகுப்பைத் தொடங்கி வைத்தார் 91 வயது நிரம்பிய பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சத்தியசுந்தரி.
‘பாரதி ஜோதி ‘ அணிவகுப்பு இசை முழக்கத்துடன் கம்பீரமாக
புறப்பட்டு ஈரோடு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியாக பாரதி விழா நடைபெற்ற கொங்கு கலையரங்கம் வந்து சேர்ந்தது.
விருதாளர் முனைவர் சேதுபதி பாரதி ஜோதியைப் பெற்றுக்கொண்டு சிறிது தூரம் நடந்து அரங்கத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி படத்தின் முன்பு ஜோதியை ஊன்றி வைத்தார். ஜோதி விழா முடியும் வரை சுடர்விட்டு எரிந்த வண்ணம் இருந்தது.
பாரதி விழா நிகழ்வில் பல வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.