கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 10
கரூர் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் கள அளவிலான குழுவில் 8 நோய் ஆதரவுச் செவிலியர் மற்றும் 9 இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 101 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் மூலம் வழங்கப்படும்.
அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் இயன் முறை சிகிச்சைகளை வழங்குகிறார்கள்.மேலும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 194 மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள் சுகாதாரத்துணை மையங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மருத்துவ மையங்களில் தரத்திற்கேற்ப தொற்றா நோய் களுக்கமான மருத்துவ சேவையை வழங்க ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு செவிலியர், அரசு மருத்துவமனைகளில் 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2 செவிலியர்கள் விதம் மொத்தம் 53 செவிலியர்கள் முதன்மை இடைநிலை மற்றும் 3ஆம் நிலை மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் இது வரை 8,59,360 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1,79,896 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சையும், 84,055 நபர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 79,268 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், 15,205 நோய் ஆதரவு சிகிச்சையும் மற்றும் 24,803 நபர்கள் இயன்முறை சிகிச்சையும் என மொத்தம் 3,83,227 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்று வரும் ஒவ்வொரு நோயாளியின் விபரமும் சமூதாய நலப் பதிவேட்டில் பதியப்பட்டு அவர்களுடைய உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பாக்கியம் தெரிவித்ததாவது. என் பெயர் பாக்கியம் எனக்கு வயது 64, நானும் எனது கணவரும் கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியில் வசித்து வருகின்றோம். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது.இதற்காக ஒவ்வொரு மாதமும் பேருந்து மூலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக நேரில் எனது மகன் அழைத்து செல்வான். இதனால் மற்றவர்களுக்கு நாம் ஒரு பாரமாக இருக்கிறோமோ என்ற வருத்தம் அவ்வப்போது ஏற்படும். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை அறிவித்தது செயல்படுத்தி வருகின்றார்கள்.
இதன் மூலம் எனது வீட்டின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பதிவேட்டில் எனது விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக எனது வீட்டிற்கே செவிலியர் மற்றும் சுகாதார பணி தன்னார்வலர்கள் நேரில் வந்து என் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தினை பரிசோதித்து எனக்குத் தேவையான மாத்திரைகளை வழங்குகின்றனர்.
இதனால் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நிலைமாறி மருத்துவர்களே என்னைத் தேடி வந்து பரிசோதித்து தேவையான மாத்திரைகளை வழங்க இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
எங்களைப் போன்றவர்களுக்கு எந்த கட்டணமும் பெறாமல் தொடர்ச்சியாக வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்த்து மருத்து மாத்திரைகளையும் யாரும் வழங்குவார்கள் என்று எங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
இப்பொழுது என் கணவன் அல்லது மகனை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டுமென நான் கேட்பதில்லை.வீட்டிற்கே வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்க்கு எங்களைப் போன்றவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
என பாக்கியம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் கரூர், வெள்ளியனை சேர்ந்த கோபால் தெரிவித்ததாவது.
என் பெயர் கோபால் எனக்கு வயது 72, எனக்கு கடந்த மூன்று வருடமாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு எனது வலது கை மற்றும் கால் செயல் இழந்துள்ளது. எனது மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அதிகளவு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இயன்முறை சிகிச்சை பெற்று வந்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பதிவேட்டில் எனது விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதா மாதம் எனது வீட்டுக்கே பிசியோதெரபிஸ்ட் மற்றும் சுகாதார பணி தன்னார்வலர்கள் நேரில் வந்து என்னை பரிசோதித்து தேவையான உடற்பயிற்சியிளை அளித்து வருகிறார்கள்.
தற்பொழுது எனது உடல் அசைவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட இப்போது என் கை மற்றும் கால் அசைக்க முடிகிறது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அறிவித்து செயல் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நலமோடு வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன் என கோபால் தெரிவித்தார்கள்.
தொகுப்பு
க.செந்தில் குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
கரூர் மாவட்டம்