கரூர் -செப் -11
கரூர் மாவட்டத்தில் 587 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடனை கலெக்டர் மீ.தங்கவேல் வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு அரங்கில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மீ.தங்கவேல் பேசினார். தமிழக முதல்-அமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திருவிழாவில் 571 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6,299 உறுப்பினர்களுக்கு ரூ.36.70 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளையும், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை சேர்ந்த 386 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் வங்கி பெரும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், 10 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த100 உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் அமுதசுரபி கடன் உதவிகளையும், 65 உறுப்பினர்களுக்கு ரூ.29 லட்சம் வட்டார வணிக வள மையக் கடன்களையும், வாழ்ந்து காட்டுவோம். திட்டம் சார்பாக இரண்டு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ. 26 லட்சம் இணை மானியங்கள் என மொத்தம் 588 சுய உதவி குழுக்களை சேர்ந்த 6,858 உறுப்பினர்களுக்கு ரூ. 41 கோடியே 10 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.