மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர். பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பரணிகள், கள்ளிச்செடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் ஆகியவை உள்ளன.
அதேபோல் பல வெளிநாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள் மலர் செடிகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.
இந்நிலையில் பூங்காவின் மேல்பகுதியில் அமைந்துள்ள இத்தாலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு தற்போது பூத்துள்ளன.
இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும்.
தற்போது வெள்ளை மற்றும் ஊதா, இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வரும் நிலையில் அதன் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.