ராமநாதபுரம், டிச.18-
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் போன்று இங்கும் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதால் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலை தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை போன்று இங்கும் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கணபதி ஹோமமும், அஷ்டாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தலைமை குருசாமி மோகன் கொடிமரத்தில் பூஜைகள் செய்து மண்டல பூஜை விழா கொடியை ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.
மண்டல பூஜை முன்னிட்டு தினமும் அதிகாலை 4.15 மணிக்கு கணபதி ஹோமமும் அஷ்டாபிஷேகமும் தீபாராதனை மற்றும் ஸ்ரீ பூதபலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி காலை நான்கு மணிக்கு கோ பூஜை உடன் துவங்கி கணபதி ஹோமம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்களும் காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களும் மணிகண்ட சுவாமிமார்களும் காலை 8 மணிக்கு வர்ணம் பொடியை பூசிக்கொண்டு ரெகுநாதபுரத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் பேட்டை துள்ளி வரும் நிகழ்ச்சியும் பின்னர் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் அருகே உள்ள பஸ்ம குளத்தில் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆராட்டு விழா பக்தர்களின் சுவாமியே… சரணம் ஐயப்பா… என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்ப வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பின்னர் கொடி இறக்கம் நடந்த பின்னர் மகா அபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை
விழாவில் பங்குபெறும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்படும்.
மண்டல பூஜை விழா ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஸ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மண்டல பூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.