நாகர்கோவில் மார்ச் 1
கன்னியாகுமரி வனத்துறை சார்பில் இன்று (மார்ச் 1 தேதி முதல் 4 தேதி வரை) வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வகை உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புகைப்பட கண்காட்சி நடைபெறும்.
மேலும் முதல் நாள் (மார்ச் 1ம் தேதி) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும், அதேநேரம் பொதுமக்கள் நான்கு நாட்களும் இந்த கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவு கட்டணம் இல்லை.
இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி இயற்கை அறநிறுவனத்தை சார்ந்த 50 தன்னார்வல புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட அற்புதமான வனவிலங்கு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் வனத்துறையினரின் இந்த முயற்சி, மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை மரபைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தவும், அதன் அழகை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் உதவும்.
திறமையான புகைப்படக்காரர்களின் கண்ணோட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகைக் காண இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.