நாகர்கோவில் பிப் 26
ஓவியத்தால் உயிரோட்டம் பெற்ற சுவர். அடுத்த நொடி அதிர்ச்சி
குமரி மாவட்டத்தின் நினைவுச் சின்னங்கள், இயற்கை வளம், தட்பவெப்ப நிலை, சுற்றுச்சூழல், மக்களின் வாழ்க்கைமுறை, வீரம், பண்பு, கொடை, நாட்டியம், கலை, இலக்கியம், பண்பாடு,
விழிப்புணர்வு, பயனுள்ள தகவல்கள், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் பார்த்து தெரிந்து கொள்ளும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மதில் சுவரில் வரைந்து வைத்திருப்பது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் வெறுமனே காணப்பட்டது. தற்போது குமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனா பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்திச் செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் நம்முடைய மாவட்டத்தின் முக்கிய தலங்களையும் அரசால் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளையும் சாமானிய மனிதன் வரை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் படத்துடன்( படம் பேசும் ) சித்திர கலை நயத்துடன் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதனால் குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், அண்டை மாநிலத்தவர், வெளிநாட்டினர் என அனைவரும் நமது பெருமையை கண்டு முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட இது ஒரு தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பார்ப்போரின் கண்ணுக்கு விருந்து அளிப்பதாக உள்ளது.
பழமையான கலைநயமிக்க ஒப்பற்ற சாலையோர சுவர் ஓவியங்களை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்த பெருமை குமரி மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. மதில் சுவரில் படங்கள் வரையும் பணி கிட்டத்தட்ட நிறைவும் பெற்றாகிவிட்டது.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அழகான ஓவியத்தின் மேல் சேற்றை வாரி எரிந்தது போல் தற்போது அசிங்கமாக காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-
மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
சாதாரண மனிதன் கூட எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக தத்ரூபமாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் வரையப்பட்டு அனைவரும் பார்த்தும் படித்தும் வருவதை பார்க்க முடிகிறது.
ஆனால் திடீரென இவை அனைத்தையும் சிமெண்ட் கலவை ஊற்றி அளிக்க முயற்சி நடைபெறுகிறது. இத்தனை அழகான படங்களை வரைவதற்கு முன்னாக மதில் சுவர்களை இடித்து கட்டி இருக்கலாம், சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் பல லட்ச ரூபாய்கள் செலவழித்து அழகான ஓவியங்கள் வரையப்பட்ட பின்னர் மதில் சுவர்களை அழகு படுத்த மேல் பகுதிகளை இடித்து மீண்டும் காங்கிரீட் செய்ததால் சிமெண்ட் கலவை நீர் ஓவியர்களால் வரையப்பட்ட படத்தின் மீது வடிந்து மிகவும் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் தற்போது காணப்படுகிறது.
இவ்வளவு அழகான படங்களை வரைந்த பின்னர் மதில் சுவர்களை இடித்து கட்ட அனுமதி வழங்கிய அதிகாரி மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மீண்டும் மதில் சுவரில் முன்பு இருந்தது போல் ஓவியம் தீட்டி பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். சரியாகத் திட்டமிடாமல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ( ஒரு செயல் செய்வதற்கு முன் நன்கு ஆலோசனை செய்து செயல்படுத்த வேண்டும் ) மதில் சுவரை இடித்து, ஓவியங்களை நாசமாக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து இவரால் அரசுக்கு ஏற்பட்ட பண இழப்பை அந்த அதிகாரிக்கு அபராதமாக விதித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.