கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தையொட்டி, மாணவியர்களை கொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் துவக்கி வைத்து, மாணவியர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நெகிழிப் பைகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் சர்வதேச நெகிழி பை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், நெகிழிப்பை பயன்படுத்துவதின் தீங்கினைப் பற்றி அறிந்து கொள்ள இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் பாதிப்பு, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுதல், அதனால் ஏற்படும் உடல் தீங்குகள், நிலம் மாசுப்படுதல், காற்று மாசுப்பாடு ஏற்படுகிறது. மாணவச் செல்வங்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து சில்வர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.
நமது மாவட்டம் நிர்வாகம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை கொண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முக்கிய ஹாட்ஸ்பாட் ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெகிழி இல்லா பகுதியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை வலியுறுத்தவும் அதனை எதிர்கொள்ளவும், மாவட்ட காலநிலை மாற்றக்குழு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக, மாவட்டம் முழுதிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டங்களிலும் செய்யப்பட்டு வருகிறதுகிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை தடுப்பது குறித்து மாணவியர்களை கொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற எழுத்து வடிவில் நிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை அறம் விதை அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் இரத்ததான சேவை குழு, அன்பு குளோபல் /பேமிலி, பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் ஆகிய தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.
மேலும், மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் இதுவரை 44 நிறுவனங்களை கொண்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவச் செல்வங்கள் எதிர் கால சந்ததியினருக்கு மாசு இல்லா பூமியை ஒப்படைக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் .கிருஷ்ணன், .தீனதயாளன், உதவிப் பொறியாளர்கள் .கணேசன், .நீலமேகம், .வினோதினி, அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா, மாவட்ட பசுமைத்தோழி செல்வி.நட்டார் கனி மற்றும் அறம் விதை அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் இரத்ததான சேவை குழு, அன்பு குளோபல் /பேமிலி, பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.