நாகர்கோவில் அக் 19
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு விஸ்வகர்மா இயக்கத்தின் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டருமான சந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று, மூன்றுபேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சந்திரன் ரத்தக் காயத்துடனே கோட்டாறு காவல்நிலையத்தில் சென்று புகாரும் கொடுத்தார். அங்கிருந்தே ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு படுகாயம் அடைந்திருந்த சந்திரன், ஆம்புலன்ஸிலேயே சென்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பத்துநாட்களுக்கும் மேலாக உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரன். இந்தச் சம்பவம் நடந்து 25 நாட்கள் கடந்த நிலையிலும் கோட்டாறு காவல் நிலைய போலீஸார் இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை. அதனாலேயே குற்றவாளிகளை பிடித்து விசாரிக்கக்கூட இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரான நானே நேரில் சென்று கோட்டாறு காவல் நிலையத்தில் இதுகுறித்து முறையிட்டேன். அதன் பின்பும்கூட முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் சந்திரன், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுகொடுத்து விளக்கியும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சந்திரனைக் குண்டர்கள் தாக்கியதில் கன்னத்தில் ரத்தகாயம், அதனால் போடப்பட்டுள்ள தையல், பற்கள் சேதம் என இருந்தும் காவல்துறையினர் வழக்குப்பதியவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அதேநேரம் எளிய மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் மீது யாரேனும் பொய்புகார் கொடுத்தால், அது பொய் புகார் எனத் தெரிந்தும் வேகம் காட்டுகிறது காவல்துறை. அப்படி விசிக நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளரான என் மீதே நேசமணிநகர் காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் ஒரு உண்மை சம்பவத்திற்கு வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கின்றனர். சந்திரனைத் தாக்கியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 29 ஆம் தேதி, செவ்வாய் கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நீதிகேட்டு முறையிடும் நிகழ்வை விசிக சார்பில் முன்னெடுப்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.