பூதப்பாண்டி ஜன 3
தடிக்காரன்கோணம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
பின்னர் நோயாளிகள் வருகை, உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், பிரசவங்கள் குறித்த விவரங்களை மருத்துவர் ஷாலியிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
தற்போது 30 படுக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர் பணியிடங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருக்கிறார். பிற மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதைப்போன்று 5 செவிலியர் பணியிடங்களில் 3 பேர் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார்கள். இதனால் மருத்துவ சிகிட்சைக்கு வருகின்ற இக்கிராம மக்களுக்கு முறையான சிகிட்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் மார்களின் பிரசவ எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாதத்திற்கு 1 அல்லது 2 பிரசவங்கள் மட்டுமே இங்கு நடைபெறுகிறது. அதற்குரிய வசதிகளை குறிப்பாக மருத்துவர்கள், செவலியர்களை அரசு நிர்ணயித்த அளவு நியமித்தால் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் மருத்துவ குடியிருப்புகளுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை குடியமர்த்த அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் இக்கிராமத்தில் இருந்து வருகின்ற நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிட்சைகள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்் தெரிவித்தார்.
உடன் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் அஜன்ஹெலிடர், ஆகியோர் இருந்தனர்.