மதுரை ஜூன் 12,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 1434-ம் பசலி ஆடி முளைக்கொட்டு
உற்சவத்தில் 04.08.2024-ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கி 14.08.2024-ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மன் சேத்தி சேரும் வரையிலும் திருக்கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு தங்கரத உலா, உபயதிருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு இயற்றுவர். அந்த வகையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வருகின்ற திருவிழாக்களில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும். இதில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் (05.08.2024 முதல் 14.08.2024 முடிய) திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் அருள்மிகு மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு உலா காண்பார். நாதஸ்வரக் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர். ஏழாம் திருநாள் அன்று (11.08.2024) இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத்திருவிழாவாகும் என கோவில் நிர்வாக இணை ஆணையர் /செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.