நாகர்கோவில் டிச 19
கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10,000 பேர் பயன் பெறும் வகையில் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கலைஞர் கைவினை திட்டம் 2024-25 முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்பக் கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகுக் கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலான பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர், வண்ணம் தீட்டுவோர், கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோகப் பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர், மீன் வலை செய்வோர் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு தொழில்திறம் சார் மேம்பட்ட பயிற்சியுடன் அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 இலட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
கடன் தொகையில் 25% அதிக பட்சம் ரூ.50,000/- மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான வழங்கப்படும். ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும்
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்த வகைத் தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க தனி நபரின் போட்டோ, ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை. சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்சொன்ன இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, கோணம் அஞ்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04652-260008 என்ற எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகு மீனா, கேட்டுக்கொண்டுள்ளார்.