மார்த்தாண்டம், டிச- 8
பார்வதிபுரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜின் குமார். ராணுவ வீரர் . தற்போது கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுஜின் குமார் தனது மனைவி ஷீபாவுடன் மார்த்தாண்டம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மூன்று வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அவர்கள் சுஜின் குமார் வாகனம் அருகே வந்து அவதூறு பேசி உள்ளனர். இதனை சுஜின் குமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் கொல்லஞ்சி என்ற பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சுஜின் குமார் வழிமறித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஷீபாவின் கழுத்தில் கடந்த தாலி செயினை பறித்துள்ளனர். அவர் சத்தம் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தில் அங்கு திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை மார்த்தாண்டம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் தொலையாவட்டம் பகுதி சேர்ந்த ஜோஸ்வா (22) கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடியவர்கள் முருகன் குன்றம் சுனாமி காலனியை சேர்ந்த ஜெப்ரின் (22), அபிஷேக் (24) என தெரியவந்தது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.