நாகர்கோவில் ஜூலை 23
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். இதில் குறிப்பிடும்படியாக ஊனமுற்றவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வரும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போலீசார், தனிப்பிரிவு போலீசார், பொதுமக்கள், அலுவலக பணியாளர்கள் என யாராவது இவர்களுக்கு மனித நேயத்துடன் உதவுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பெரியவர் ஆதார் கார்டு திருத்துவதற்க்காக நேற்று தனது ஊனமுற்ற மனைவியை மூன்று சக்கர தள்ளுவண்டியில் அழைத்து வந்தார். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக இரு வழிப்பாதை அடைக்கப்பட்டு ஒரு வழி மார்க்கமாக வாகனங்கள் அதிக அளவில் வருவதால் சாலையில் நடந்து செல்ல முடியாதபடி வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவியை தள்ளு வண்டியில் வைத்து அழைத்து வந்த முதியவர் சாலையை கடக்க முடியாமல் வெகு நேரமாக காத்திருப்பதை கண்ட தனிப்பிரிவு காவலர் அசோகன் உடனடியாக சென்று சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பான முறையில் அவர்கள் சாலையை கடக்க உதவி செய்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் வயதானவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்த தனிப்பிரிவு காவலரை வெகுவாக பாராட்டி மனிதம் மரிக்கவில்லை இவர் போன்ற மனிதர்கள் மூலம் அவ்வப்போது வெளிப்படுவதாக கூறி மனதார பாராட்டி வருகின்றனர்.