தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கடையநல்லுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடைகால் கிராமத்தில் தொடங்கி வைத்து கோமாரி நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை நல அட்டைகளை வழங்கினார். முகாமில் 150 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது
தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 59 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் ஆகிய துறைகளுடன் இணைந்து செயலாற்ற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திட குழுவினர் வரும்போது அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் முகாமில் தீவனப்பயிர் மேம்பாட்டு திட்டம் 2023-24 இன்கீழ் 50 % மானியத்துடன் கூடிய இயந்திர புல்வெட்டும் கருவி வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 35 பயனாளிகளில் 4 பயனாளிகளுக்கு ரூ.15,375 மானியத்தில் இயந்திர புல்வெட்டும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மு.மகேஷ்வரி, மருத்துவக் குழு கால்நடை உதவி மருத்துவர்கள் S.தனலெட்சுமி, N.இம்தியாஸ்அகமது, S.P.சிவகுமார் கால்நடை ஆய்வாளர்கள், அண்ணாதுரை, லதா, இடைகால் ஊராட்சி மன்றத்துணைதலைவர் S.முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள் K.மாலதி, B.கலைச்செல்வி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.