நாகர்கோவில் ஜூலை 5
சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
‘‘வீரத்துறவி” என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் காலை அன்ன பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.
மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவி நிவேதிதா குத்துவிளக்கு ஏற்றி அன்ன பூஜையை தொடங்கி வைத்தார். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார். நாகஜோதி ஐக்கிய மந்திரம் பாடினார். சாந்தி அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பாடினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த அன்ன பூஜை அரிசியினை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி பகுதியை சார்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினையும் வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் அனுமந்த ராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆசியுரை வழங்கினார். கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை 18 இடங்களில் இதுபோன்று அன்ன பூஜை நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய துணை தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரி செயலாளர் ராஜன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெசிம், சந்துரு, சுகுமாரன், வழக்கறிஞர் ஜெயகோபால், அக்ஷயா கண்ணன், வைகுண்டமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.