அஞ்சுகிராமம், செப்.18: கன்னியாகுமரி அருகே செவ்வாய்கிழமை ரஸ்தாகாடு கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் ஜெயந்த் ஜாய் (18) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர் ஆட்டோவில் கன்னியாகுமரி அருகேயுள்ள ரஸ்தாகாடு கடலில் குளிப்பதற்காக வந்துள்ளனர். இம்மாணவர்களில் இருவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கினர்.
இதில், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் தருண் (18) என்பவரை பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற இளைஞர் தைரியமாக கடலுக்குள் குதித்து கரைக்கு இழுத்து வந்தார். தொடர்ந்து இம்மாணவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இதில் உயிர் பிழைத்த மாணவர் தருண் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், காணாமல் போன மாணவர் ஜெயந்த் ஜாய் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டதால் சடலமாக மீட்கப்பட்டார். இவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.