சிவகங்கை:டிச:07
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் மாநில தலைவர் வரதராஜ் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் சாமுவேல் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர் . இந்த மாநாட்டு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது .
கூட்டத்தின் முடிவில் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது : கடந்த ஆட்சிக்காலத்தில் ஆம்புலன்ஸ் தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அதை அரசு நிறைவேற்றிக் கொடுத்தது . நிதிநிலை நெருக்கடிகள் ஏற்பட்ட போது கூட நன்கொடைகள் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை நிறைவேற்றித் தந்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் புதிய அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற பின்பு ஒரு புதிய ஆம்புலன்ஸ் கூட வாங்கவில்லை . மாறாக காரணங்களைக் காட்டி ஆம்புலன்ஸ் சேவைகளை குறைக்கும் நடவடிக்கைகளே நடந்து வருகிறது . பழுதான ஆம்புலன்ஸ் கூட பழுது பார்க்காமல் நிறுத்தப்பட்டு விடுகிறது . இப்போதுள்ள அரசு கடந்த ஆண்டில் 800 ஆம்புலன்ஸ் போதும் என்றது . நடப்பாண்டு 900 ஆம்புலன்ஸ் போதும் என்கிறது . 8 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் குறைந்தபட்சம் 8 ஆயிரம் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது . ஆனால் அரசு ஆப்பிரிக்கன் நாடுகளோடு ஒப்பிட்டு ஆம்புலன்ஸ்களை குறைத்து வருவது என்பது வேதனை அளிக்கிறது . தற்போது பொதுவாகவே எதிர்பாராத விபத்துக்கள் அவசரத் தேவைகள் குடிபோதை மரணங்கள் என அதிகரித்து வரும் நிலையில் ஆம்புலன்ஸ் தேவைகளை அதிகரிக்க செய்வது அவசரத் தேவையாக இருக்கிறது .
இதுபோன்ற எங்களின் சேவைகள் தொடர்பாக பேசும்போது சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் அல்லது பணியிடை நீக்கம் செய்து விடுகிறார்கள் .நாங்கள் கூறும் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்த மறுத்து விடுகிறது . இதுபோன்ற அரசின் செயல்பாடுகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது . மேலும் இந்த நிலை நீடித்து வருவதால் பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து அமைப்பினர்களையும் அணி திரட்டி வரும் (டிசம்பர் ) 18 ம் தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் கவனயீர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் இவ்வாறு அவர் பேசினார் . அப்போது மாவட்ட நிர்வாகிகள் தினகரன் தாமஸ்ராஜா
மற்றும் சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.