நவ. 9
திருப்பூர் மாநகரத்தை பொருத்தமட்டில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் பொழுது செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நாள்தோறும் விபத்துகள் அதிகரித்து வரும் சூழலில் விபத்துகளை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். லட்சுமி உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் விபத்தில்லா திருப்பூர் தன்னார்வ தொண்டு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு செல்போன்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி அருகே மாநகர துணை ஆணையர் அசோக் கிரிஷ் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எமன் வேடம் அணிந்த விழிப்புணர்வு தந்தை அப்பாவு என்பவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினார்.
தொடர்ந்து வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் பொழுது தலைக்கவசம் அணிய வேண்டும் செல்போன் பேசக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. முறையான தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விபத்தில்லா திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். மோகன் கார்த்திக், போக்குவரத்து காவல் உதவி ஆணையர். சுப்புராமன், தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர்கள் முத்துச்செல்வன் கண்ணன் மற்றும் போக்குவரத்து காவலர்களும் விபத்தில்லா திருப்பூர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களும் பலர் கலந்து கொண்டனர்.