மதுரை ஜனவரி 20,
மதுரையிலிருந்து கூடல்நகர் வழியாக செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல இரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் ஏழை எளிய மக்களுக்காக
ரூபாய் 175 கட்டண வீதம் (ஒரு வழிக்கு மட்டும்) மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும், மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரைக்கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதனை தொடர்ந்து (சென்னை) எழும்பூர்- மதுரை மெமு ரயில் காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்து சேர்ந்தது. மறு மார்க்கத்தில் மதுரை-சென்னை முன்பதிவில்லா மெமு ரயில் இன்று மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
இந்நிலையில் சென்னையிலுருந்து மதுரைக்கு வந்த மெமு ரயில் கூடல்நகர் சந்திப்பில் நின்று செல்லும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதனை வரவேற்க்கும் விதமாக விளாங்குடி, கூடல் நகர், சாந்தி நகர், அஞ்சல் நகர், விண்வெளி நகர், பொதிகை நகர், இரயிலார் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் கூடல்நகர் இரயில்வே ஜங்ஷனில் இரயிலை வரவேற்று ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தும், இரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இனிவரும் காலங்களில் மதுரையிலிருந்து கூடல்நகர் வழியாக செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் கூடல்நகர் இரயில்வே சந்திப்பில் நின்று செல்லவேண்டும் என்று இரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.