நாகர்கோவில், ஆக – 13,
புதுக்கோட்டையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலப் பயன்கள் வழங்கும் விழாவில் பேசிய நல வாரியத் தலைவர் பொன் குமார் உண்மையான கட்டுமான தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என்றும் போலி கட்டுமானத் தொழிலாளர்களே போராடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். பல்வேறு பத்திரிகைகள் அதை வெளியிட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் நலவாரிய செயல்பாடுகளில் குளறுபடிகள் இருப்பது தொடர்ந்து போராடும் தொழிற்சங்கங்களால் சுட்டிக் காட்டப்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெரு மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான வாரிய பதிவுகள் காணாமல் போய்விட்ட தாகவும் சொல்லப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலப் பயன்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே பயன்கள் வழங்கப்படுகின்றன. நலவாரியப் பயன்கள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டியும் நல வாரியத்தில் இருப்பிலுள்ள தொகைகளைக் கொண்டு கூடுதல் பயன்கள் வழங்க முடியும் என்றும், இருப்புத் தொகையை வேறு செலவினங்களுக்கு மடை மாற்றம் செய்யக்கூடாது என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றன. மாவட்ட அளவில் ஏற்கவே நடைமுறையில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கண்காணிப்புக் குழு கூட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய
மோடி அரசின் தொழிலாளர் விரோத புதிய நான்கு சட்டத் தொகுப்புகள் அமலாக்கப்படுமானால் அது நல வாரியங்களின் இருத்தலுக்கு அசாசுறுத்தலாக அமையும் என்றும் தொழிற்சங்கங்களால் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு எதிராக சங்க கூட்டு குழு சார்பில் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது வாரிய தலைவர் அறிந்தது தான்.
உண்மை நிலை இப்படி இருக்கையில், திரு பொன் குமார் அவர்களின் போராடும் கட்டுமான தொழிலாளர்களை போலி தொழிலாளர்கள் என்று சொல்லும் புதுக்கோட்டை பேச்சு அடிப்படை அற்றது கடும் கண்டனத்திற்குரியது. திரு பொன் குமார் தன்னுடைய பேச்சை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ( ஏ ஐ சி சி டி யு) தமிழ் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.