ராமநாதபுரம், நவ.24-
அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இடைவிடாது தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ராமநாதபுரம் நகர் பகுதி மட்டுமில்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடுகிறது.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியான சக்கரக்கோட்டை, நேருநகர், ஆர்.டி.ஓ அலுவலகம், ராமநாதபுரம் நகர், பழைய பேருந்து நிலையம், வண்டிக்காரத்தெரு, சாலைத்தெரு, அரண்மனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைநீர் குளம்போல சாலைகளிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியது.
குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் அதிகமாக தேங்கியதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வெளி நோயாளிகளும், அவசர சிகிச்சைக்கு வந்து செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரை- ராமேஸ்வரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கழக நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாள தெரியாத அரசாகத்தான் இந்த விடியா திமுக அரசு திகழ்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது பேரிடர் காலங்கள் மற்றும் மழைக்காலங்கள் வரும்போதெல்லாம் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிகளை சிறப்பாக கையாண்டவர்.
அப்போது குடிமராமத்து பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதிமுக ஆட்சியின் போது நீர்,நிலைகளை பாதுகாத்தோம். மழை நீரை சேமித்தோம். விவசாயிகளின் பங்களிப்போடு இந்த திட்டங்களை சிறப்பாக வகுத்தோம்.
இதனால் கண்மாய் கரைகளை பலப்படுத்தினோம், மடைகள், கலுங்குகளை பழுது பார்த்தோம், மறுக்கட்டுமானம், சீமை கருவேல மரங்களையும் அகற்றினோம். விவசாயிகளின் பங்களிப்போடு பணிகளும் துரிதமாக நடந்தது.
63 கண்மாய்கள் புனரமைப்பு செய்து நீர் நிரப்பப்பட்டு விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்தவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
திமுக ஆட்சியில் எத்தனை கண்மாயிகள் புனரமைப்பு செய்து நீர்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று யாராலும் சொல்ல முடியுமா..?
தற்போது பெய்த கன மழையால் விவசாய பகுதிகளில் பயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை அரசு உடனே வழங்க வேண்டும்.
அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்.
கன மழையால் பாதிக்கபட்டு தங்களது உடமைகளை இழந்த குடும்பங்களுக்கு தங்களால் முடிந்த அளவில் பொருளுதவியோ அல்லது அத்தியாவசிய பொருட்களையோ வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.